கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும் குட்டிக் குழந்தையின் எடை சராசரிக்கும் குறைவாக இருந்தால், அதன் மீது எடுத்துக்கொள்ள வேண்டிய அக்கறை அதிகமாக இருக்கும். சிறு சிறு நகர்வுகளையும் கவனமாகப் பார்க்க வேண்டியதாக இருக்கும். பிறந்த குழந்தையின் எடை மூன்று கிலோ இருக்க வேண்டும். அதற்கும் கீழ் என்றால் குறைந்த பட்சம் 2.75 கிலோ வரை இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அதைவிட குறைவாக இருந்தால் ஊட்டசத்து குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சனைகளை அக்குழந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

 

கருவில் குழந்தை வளரும்போதே சிசுவுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைத் தாய் எடுத்துக்கொண்டால், குழந்தை குறித்துக் கவலையின்றி வாழலாம். ஏனென்றால் அது இயற்கையாகவே ஆரோக்கியமான உடலைப் பெற்று விடும். சரி என்னென்ன உணவுகள் சிசுவின் எடையை அதிகரிக்க  உதவும் என்பது பற்றிப் பார்க்கலாம்.

 

குறைந்த எடையுடன் குழந்தைப் பிறக்க என்ன காரணம்?(Foods to Help Baby Fetal Weight Gain During Pregnancy in Tamil)

 

குழந்தைப் பிறக்கும்போது அதன் குறைந்தபட்ச அளவான 2.75 கிலோவை விட உடல் எடை குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம் தாய் எடுத்துக்கொள்ளும் உணவில் ஊட்டச்சத்து அளவு குறைவதுதான். வயிற்றில் சிசுவை வைத்துக்கொண்டு சாப்பிட சிரமமாக இருக்கிறது என்பதற்காக பெரும்பாலான கர்ப்பிணிகள் உணவை தவிர்க்கவே நினைப்பார்கள். அப்படி தவிர்ப்பதால்தான், சிசுவின் எடை குறைவாக இருக்கிறது. இது தவிர தாயின் மரபு ரீதியான காரணங்களும், அதிக வயதும் கூட காரணமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் தாயின் சீரற்ற உணவும் அதன் காரணமாக தாயின் உடல் எடை குறைவாக இருப்பதாலும்தான் ,குழந்தையும் உடல் எடை குறைவாகவே பிறக்கிறது. எந்த வகையான உணவுகளைத் தாய் எடுத்துக்கொண்டால், சரியான உடல் எடையுடன் பிறக்கும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

 

முட்டை

காய்கறிகளை விட முட்டையில் அதிகளவு புரோட்டின் இருக்கிறது. மேலும் இதில் கூடுதலாக போலிக் ஆசிட், கோலின் மற்றும் இரும்புச் சத்து ஆகியவையும் உள்ளதால் தினமும் ஒரு வேக வைத்த முட்டையைச் சாப்பிட்டு வந்தாலே கர்ப்பிணிப் பெண்களுக்குப் போதுமானது. மருத்துவர் பரிந்துரைத்தல்படி அளவில் சிறு மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதனால், அளவுக்கு அதிகமான முட்டையை எடுத்துக்கொள்ளக் கூடாது. உடலில் புரதத்தின் அளவு அதிகமானால், குழந்தை குண்டாகப் பிறக்கும் அபாயம் உள்ளது.

 

உலர்ந்த பழங்கள்

கர்ப்பிணிகள் உலர்ந்த பழங்களைத் தினசரி சாப்பிட வேண்டும். அதாவது உலர்ந்த திராட்சை, அத்திப் பழம், பேரீட்சை ஆகியவற்றைத் தினசரி மாலை நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிகம் இல்லை என்றாலும் குறைந்தபட்சம் நான்கு ஐந்து பழங்களாவது சாப்பிட்டு வர வேண்டும்.

 

கொட்டைகள்

முந்திரி, பாதாம் உள்ளிட்ட கொட்டை வகைகளில் புரதத்துடன் விட்டமின்களும் இருப்பதால், இவற்றையும் தினசரி உட்கொள்ள வேண்டும். உலர்ந்த பழங்களைப் போலவே இவற்றை மாலை நேரத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. அல்லது பகல் நேரங்களில் அவ்வப்போது ஒன்று இரண்டுப் பழங்களாகச் சாப்பிடலாம்.

 

கீரை வகைகள்

முருங்கைக் கீரை, அரைக் கீரை, மணத்தக்காளி என எந்த வகை கீரையாக இருந்தாலும் கர்ப்பிணிகள் தவறாது எடுத்துக்கொள்ள வேண்டும். அகத்திக் கீரையைத் தவிர்ப்பது நல்லது. அது பேறு காலத்தில் சாப்பிடும் மாத்திரை காரணமாக ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். கீரை வகைகளில், வைட்டமின்கள், தாதுக்கள் என ஏராளமான சத்துக்கள் இருப்பதால், இது குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுகின்றன.

 

பால்

கர்ப்பிணிப் பெண்கள் தினசரி குறைந்தது 2 டம்ளர் அளவு பால் குடிக்க வேண்டியது அவசியம். தினசரி 200-500 மி.லி பால் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். காலை, மாலை என இரு வேளை அளவான அளவில் பால் எடுத்துக்கொள்ளலாம். பாக்கெட் பால்களைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக பசு அல்லது எருமை மாட்டுப் பாலை பருகினால் நல்லது.

 

யோகர்ட்

யோகர்ட்டில் போதுமான அளவு புரோட்டினும், பாலை விட அதிகளவு கால்சியமும் உள்ளது. மேலும் இதில் விட்டமின் பி காம்ளக்ஸ் மற்றும் துத்தநாகமும் இருப்பதால், குழந்தை உடல் எடை குறைந்து பிறப்பதைத் தடுக்கும். இது சாதாரணமாகப் பால் விற்பனை நிலையங்களிலேயே கிடைக்கிறது.

 

பழங்கள்

வைட்டமின் சி நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்ளலாம், மேலும் ஃபைபர், பொட்டாசியம் உள்ளிட்ட ஊட்டசத்துகள் நிறைந்த ஆப்பிள், ஆரஞ்சு, மாம்பழம் போன்ற பழங்களை எடுத்துக்கொள்வது சிறந்தது. அன்னாசி, பப்பாளி போன்ற வெப்பம் தரும் பழ வகைகளைத் தவிர்ப்பது நல்லது.

 

ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ் மற்றும் எலுமிச்சை ஜூஸ் கர்ப்பிணிகளுக்கு நல்லது. பழமாக சாப்பிட விரும்பாத கர்ப்பிணிகள் அவற்றை ஜூஸ் வடிவில் எடுத்துக்கொள்ளலாம். ஃபிரஸ் ஜூஸ் என பல பழங்களைக் கலந்து தயாரிக்கப்படும் ஜூஸைவிட, தனித்தனியே எடுத்துக்கொள்வது நல்லது.

 

பச்சை காய்கறிகள்

கேரட், பீட்ரூட், வெண்டைக் காய் போன்ற பச்சை காய்கறிகளில் விட்டமின் ஏ, விட்டமின் சி, இரும்புச்சத்து, மெக்னீசியம் ஆகியவை உள்ளன. விட்டமின் ஏ, ஆரோக்கியமான கண்பார்வைக்கு உதவுகிறது . மேலும் இது குழந்தை ஆரோக்கியமான உடல் எடையைப் பெறவும் உதவுகிறது. பச்சைக் காய்கறிகளைக் கர்ப்பிணிகள் சாப்பிடும்போது அதை நன்கு வெந்நீரில் கழுவிவிட்டு சாப்பிட வேண்டும்.

 

மீன்

கர்ப்பிணிகளுக்கு மீன் ஆரோக்கியம் தரும் உணவு. ஆனால் மீனை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். தொழிற்சாலை கழிவுகள் கலக்கும் பகுதிகளில் வளரும் மீன்களில் ரசாயன பொருட்கள் இருக்கலாம். இதனால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படலாம். ஏரி அல்லது அணைகளில் பிடிக்கப்பட்ட மீன்களோ அல்லது ஆழ்கடல் மீன்களோ என்றால் அச்சம் தேவையில்லை. இதுவும் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு உதவும்.

 

தானிய உணவுகள்

கம்பு சோறு, சோள சோறு போன்றவற்றில் புரதம், இரும்புச் சத்து, நார்ச் சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை தினசரி முளைக் கட்டிய தானியங்களாகவும்  எடுத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

 

வெண்ணெய்

வைட்டமின்கள் ,தாது உப்புகள் என கவனத்தில் கொண்டு உணவு எடுத்துக்கொள்வதால், உடலுக்கு தேவையான கொழுப்பு கிடைக்காமல் போய் விடும். வெண்ணெயில் உடல் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பு இருக்கிறது. வெண்ணெயைத் தனியாகவோ அல்லது பிரட், பாதாம், உலர்ந்த பழங்கள் போல வேறு ஏதேனும் உணவுப் பொருளுடன் சேர்த்தோ சாப்பிடலாம்.

இறைச்சி

உடலுக்கு தேவையான இரும்புச் சத்து, தானியங்கள் மட்டுமின்றி இறைச்சியிலும் கிடைக்கிறது. நன்கு வேக வைத்த இறைச்சியை வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம். ஆடு இறைச்சி, குறிப்பாக ஆட்டு ஈரலை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான இரும்புச் சத்துடன், பிற விட்டமின்களும் கிடைக்கும்.

 

எண்ணெய்

சூரியகாந்தி எண்ணெய் அல்லது பால்ம் ஆயில் பயன்படுத்துவதைவிட, நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. நல்லெணணெய் உடலுக்குக் குளிர்ச்சி தரும். மேலும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறையாது இருக்கும்படிப் பார்த்துக்கொள்கிறது. இதன் காரணமாகக் குழந்தையின் வளர்ச்சியும் சீராகிறது.

 

இளநீர்

வாரம் மூன்று அல்லது நான்கு முறை இளநீர் குடிப்பது கர்ப்பிணிகளுக்கு நல்லது. உடலின் வெப்பம் தணிவதால், கர்ப்பிணிகளின் உடல் எடையுடன் சிசுவின் உடல் எடையும் சீராக இருக்க உதவுகிறது.

 

தாயின் எடை

பேறு காலத்தில், தாயின் உடல் எடை 12 முதல் 16 கிலோ வரை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். அதற்காக ஒவ்வொரு மாதமும் எவ்வளவு எடை அதிகரித்திருக்க வேண்டும் என்றும் வரையறுத்துக் கூறுவார்கள். துரித உணவுகளை அதிகம் உட்கொண்டால் உடல் எடை உடனடியாக அதிகரித்துவிடும். ஆனால், கர்ப்பிணிகளின் உடல் எடை அதிகரிப்பு என்பது குழந்தைகளின் நலன் காக்கும் கலோரிகளை அதிகரிப்பதாகும். எனவே நல்ல கலோரிகள் அதிகம் எடுத்துக்கொண்டு, உடல் எடையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

மேலும் சாப்பாட்டில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது என்பதால், உணவு சமைக்கும்போது குறைந்த அளவு உப்பு போட்டு சமைப்பது நல்லது. உப்பு இல்லாமல் சாப்பிடுவது சிரமமாக இருக்கும் என்பதால், உணவு எடுத்துக்கொள்வதை ஒரு நாளைக்கு ஆறு – ஏழு வேளைகளாகப் பிரித்துக்கொள்ளலாம். உடலுக்கு தேவையான கலோரிகளை நேரத்துக்குக் கொஞ்சமாக எடுத்துக்கொண்டால், தாய்க்கும் சிரமம் இருக்காது. குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும்.

 

கர்ப்பிணிகள் அளவுக்கு அதிகமாக எடை கூடிவிட்டது எனக் கருதி ஒருபோதும் உணவை குறைக்கவே கூடாது. குழந்தைப் பிறக்கும் வரை எடை அதிகரிப்பதில் எந்த பிரச்சனையும் கிடையாது.

 

தவிர்க்க வேண்டியவை…

மைதாவில் தயாரான உணவு பொருட்களை சாப்பிடவேக் கூடாது. மேலும் இனிப்பு , அரிசி ஆகியவற்றை சாப்பிடும் அளவை குறைத்துக்கொள்ளலாம். மது அருந்தும் பழக்கமுள்ள பெண்கள், முற்றிலுமாக கைவிடுவது நல்லது. அல்லது குழந்தை பிறக்கும் வரை இது மாதிரியான பழக்கம் கூடவே கூடாது. ஆல்கஹால், குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும்.

 

கருவில் உள்ள சிசுவின் உடல் எடையை அல்ட்ரா ஸ்கேன் வசதி மூலம் கண்டறிந்து விடலாம். துல்லியமாக தெரியாவிட்டாலும் ஏறத்தாழ உரிய எடை தெரிந்துவிடும். இதை வைத்துதான் மருத்துவர்கள் குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை அறிகிறார்கள். பேறு காலத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று அல்லது நான்கு முறை குழந்தையின் உடல் எடையைக் கணக்கிட்டு அதற்கேற்ற உணவு மற்றும் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். மேலும் மாதம்தோறும் தாயின் எடையும் கணக்கிடப்படுகிறது.

 

வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவதால் எந்த சிக்கலும் ஏற்படாது. ஆனால், புரதம் அதிக அளவில் எடுத்துக்கொள்வதால், குழந்தையின் உடல் எடை வெகுவாக அதிகரிக்கும் என்று எச்சரிக்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். மேற்குறிப்பிட்ட உணவுப் பொருட்களில் புரதம் இருக்கும் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளாமல், தேவையான அளவுக்கு மட்டும் எடுத்துக்கொள்வது நல்லது.

 

எந்த சந்தேகத்துக்கும் மருத்துவரை அணுகி விளக்கம் கேட்டுத் தெளிவு பெறுவதில் தயக்கம் கூடவே கூடாது. தயக்கமின்றி நீங்கள் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளும் உணவுதான் குழந்தையின் எதிர்காலத்துக்கு அஸ்திவாரமாகப் போகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்..!

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

null

null